×

கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் மறுப்பு சென்னையை தொடர்ந்து தஞ்சாவூரிலும் அதிமுகவில் கோஷ்டி மோதல் வெடித்தது

தஞ்சை: கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்காததால் தஞ்சாவூரிலும் அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த சமயத்தில் அதிமுக ஆளும் கட்சியாக இருந்ததால் தஞ்சாவூர் மாநகராட்சியை கைப்பற்றியது. முதல் மேயராக அதிமுகவை சேர்ந்த சாவித்திரி கோபால் பணியாற்றினார். தற்போது மாநகராட்சி தேர்தலில் திமுகவினர் சுறுசுறுப்பாக பணியாற்றிவரும் நிலையில், அதிமுகவினர் சுணக்கமாகவே காணப்படுகின்றனர். இதுபற்றி விசாரித்தபோது சீட் கொடுக்கப்பட்டதில் அதிமுகவினர் இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தஞ்சாவூர் பகுதி அதிமுகவினர் கூறியதாவது: கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நேர்காணலில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் என்ற முறையில் வைத்திலிங்கம் எம்எல்ஏ கலந்து கொள்ளவில்லை. இது ஏன் என்று தெரியவில்லை. இதனால் அந்தந்த பகுதி செயலாளர்கள், தொகுதி செயலாளர் முன்னிலையில், நேர்காணல் நடைபெற்றது. முக்கிய பிரமுகர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் தங்களுக்கு சாதகமான வார்டை கேட்டனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் பலரும் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். கட்சிக்காக உழைத்த அடிமட்ட தொண்டர்கள் சீட் கேட்டும் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வார்டு தேர்தல் செலவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்ட வேட்பாளர்கள் பணம் கேட்டனர். அதற்கு தலைமை எங்களிடம் ஒன்றுமில்லை, எங்களை எதிர்பார்க்காதீர்கள் என கூறி தட்டிக் கழித்துவிட்டது.

இப்போது தேர்தலில் நிற்கக்கூட உதவி செய்ய மறுத்தால் நாங்கள் என்ன செய்வது. இந்த காரணங்களாலும், சீட் கிடைக்காத பலரும் உள்குத்து வேலையில் இறங்கி விட்டனர். இதனால் பல வார்டுகளில் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். கட்சித் தலைமை ஒருங்கிணைத்து, அரவணைத்து வேட்பாளர்களுக்கு உதவ முன்வராதது வேட்பாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது. பல இடங்களில் இப்போதே உள்குத்து வேலை ஆரம்பமாகி விட்டது. இப்படியே போனால் தஞ்சையில் வெற்றி சந்தேகம்தான். இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Koshdi ,Thanjavur ,Seat , Party, Workers, Seat, Denial, AIADMK, Conflict
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...